சட்டமன்றத் தேர்தலில் தவெக தனியாக 108 இடங்களில் வென்றும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுக்கவில்லை.
தனி பெரும் பலம் இருக்கிறது என ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார். ஆனாலும், ஆளுநர் பெரும்பான்மை கேட்டதால் அவரால் அரசை அமைக்க முடியாமல் இருந்துவருகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் அவர் ஆதரவு கோரியதன் பேரில், காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் உட்பட சில நிபந்தனைகளை முன்வைத்து அக்கட்சிக்கு ஆதரவு அளித்தது. மேலும், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு இடதுசாரிகளும் நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. இதன் மூலம், தவெகவுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனாலும், ஆட்சி அமைக்க தேவையான 118க்கு இன்னும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கிறது. அதேசமயம், விசிக தனது ஆலோசனை கூட்டத்தை முடித்து ஆதரவு தெரிவிக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு முன்னதாகவே தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுக்காமல் இருப்பது தவறு என அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்தச் சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

