திமுக உடன் உறவு நீடிக்கும்.. இனியாவது பாஜகவை எதிர்த்து பேசுங்கள்.. விஜய்க்கு சிபிஎம் வைத்த செக்

திமுக உடன் உறவு நீடிக்கும்.. இனியாவது பாஜகவை எதிர்த்து பேசுங்கள்.. விஜய்க்கு சிபிஎம் வைத்த செக்

Oneindia

Oneindia

52m

Loading...

சென்னை: மதச்சார்பின்மை மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜகவை எதிர்த்து இனியாவது விஜய் பேச வேண்டும் என்று தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள இடதுசாரி கட்சிகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் ஒரு கிளைமாக்ஸ் காட்சியைப் போல விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறப் போராடி வரும் நிலையில், இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சிகள் முறைப்படி தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

பெரும்பான்மை இழுபறியும் ஆளுநரின் நிபந்தனையும்

கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழகத்தின் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் (மேஜிக் நம்பர்) கிடைக்கவில்லை. 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஏற்கனவே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்தது.

ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், "சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறி, ஆளுநர் மாளிகை விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்தது.இன்று மீண்டும் விஜய் மூன்றாவது முறை சந்தித்த போதும் இதேபோல் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, இந்த இழுபறி நீடித்ததால் தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவி வந்தது.

திமுக - அதிமுக ரகசிய வியூகம் முறியடிப்பு?

இதற்கிடையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. 59 இடங்களைப் பெற்றுள்ள திமுகவும், 47 இடங்களைப் பெற்றுள்ள அதிமுகவும் இணைந்து செயல்படக்கூடும் என்ற யூகங்கள் பரவின. ஒருவேளை திமுக, அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தால், அந்த அணியின் பலம் 106-ஆக உயரும்.

இவர்களுடன் விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) இணைந்தாலும் மொத்த பலம் 115 மட்டுமே வரும். இதில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும் சூழல் உருவாகும். பாஜக மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய கணக்குகளும் சிக்கலாக இருந்ததால், தமிழகம் ஒரு அரசியல் முட்டுக்கட்டையை சந்தித்திருந்தது. ஆளுநரும் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஸ்டாலினின் பெருந்தன்மை: கம்யூனிஸ்ட்களுக்கு வழங்கப்பட்ட 'ஃப்ரீ ஹேண்ட்'

இந்த நெருக்கடியான சூழலில் தான் ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை அமைக்கவும், அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வியூகத்தை முன்னெடுத்துள்ளார். தனது கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர அவர் 'பச்சைக்கொடி' காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து சிபிஎம், சிபிஐ ஆகியவை விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு தர முடிவு செய்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டி

இதையடுத்து கூட்டாக பேசிய இடதுசாரி கட்சியினர், மதச்சார்பின்மை மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜகவை எதிர்த்து இனியாவது விஜய் பேச வேண்டும். தவெக ஆட்சியமைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் எங்கும் சொல்லவில்லை. ஆட்சி அமைக்கட்டும் என்றுதான் சொன்னார்.

திமுக அனுமதி பெற்று நாங்கள் ஆதரவு தரவில்லை. நாங்கள் தனி கட்சி. நாங்கள் தனியாக முடிவு எடுத்தோம். அதே சமயம் தவெக உடன் கூட்டணி இல்லை. திமுக உடன் தொடர்ந்து பயணிப்போம்

திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை தமிழக வெற்றிக் கழகமும் தொடர வேண்டும்.. ஆளுநர் ஆட்சி வராமல் தடுக்க, கொல்லைப்புறமாக பாஜக நுழைவதை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு. மதச்சார்பின்மை மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜகவை எதிர்த்து இனியாவது விஜய் பேச வேண்டும் என்று இடதுசாரிகள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

இதன் மூலம் தவெக-வின் பலம்:

தவெக: 107

காங்கிரஸ்: 5

சிபிஎம்: 2

சிபிஐ: 2

விசிக: 2 (எதிர்பார்க்கப்படுவது)

இந்தக் கூட்டணியின் மொத்த பலம் 118-ஐ எட்டுவதால், ஆளுநரிடம் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோர விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகை செல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தக் கூட்டணி என்பது தவெக தனித்து இயங்கும் ஆட்சி என்பதை விட, கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு 'கூட்டணி ஆட்சி'யாகவே அமையும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Shyamsundar I Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Tamil

Comments

6
Loading comments...