கொல்கத்தா சிறப்பான பந்துவீச்சு - டெல்லிக்கு எதிராக இலக்கு 143

கொல்கத்தா சிறப்பான பந்துவீச்சு - டெல்லிக்கு எதிராக இலக்கு 143

BBC News தமிழ்

BBC News தமிழ்

45m

Loading...
டெIடெல்லி கேபிட்டல்ஸ் அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் 2026 தொடரின் 51வது போட்டியில் இன்று (மே 8) டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வெற்றிகளும், 6 தோல்விகளும் பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகள் பெற்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 7 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி 8வது இடத்தில் இருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் மற்றும் நடராஜன் ஆகியோருக்குப் பதிலாக விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்கவீரர் பதும் நிசன்கா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கேகேஆர் பௌலர்களில் அதிகபட்சமாக அனுகூல் ராய் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

தடுமாறிய டெல்லி பேட்டர்கள்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதன் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசன்கா ஆகியோர் ஓரளவு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார்கள். இந்த இணை 5 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது. 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல், கார்த்திக் தியாகி பந்துவீச்சில் கேமரூன் கிரீன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராகுலின் விக்கெட்டுக்குப் பிறகு டெல்லி அணியின் வேகம் வெகுவாகக் குறைந்தது. 6வது ஓவரில் 6 ரன்கள் மட்டும் வர, பவர்பிளேவை 55/1 என முடித்தது கேபிட்டல்ஸ்.

வேகமாக ரன் எடுக்க சிரமப்பட்ட நித்திஷ் ராணா 8 ரன்கள் (10 பந்துகள்) எடுத்திருந்த நிலையில் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். அனுகூல் ராய் மற்றும் சுனில் நரைன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின.

சமீர் ரிஸ்வி 3 ரன்களில் நரைன் பந்துவீச்சில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார் பதும் நிசன்கா. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவரை வெளியேற்றினார் அனுகூல் ராய். அதே ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார் அனுகூல். அதனால் 89/5 என்று தடுமாறியது டெல்லி கேபிட்டல்ஸ்.

தொடர் விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக அக்‌ஷர் பட்டேல் - அஷுதோஷ் ஷர்மா ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தது. 22 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வைபவ் அரோரா பந்துவீச்சில் வெளியேறினார் அக்‌ஷர் பட்டேல்.

கடைசி கட்டத்தில் அஷுதோஷ் ஷர்மா ஓரளவு அதிரடி காட்டியதால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அஷுதோஷ் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கார்த்திக் தியாகி மற்றும் அனுகூல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

 ANI29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த பதும் நிசன்கா அனுகூல் ராய் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததற்கான காரணம் பற்றிப் பேசிய கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, "கடந்த 3-4 போட்டிகளில் நாம் பார்த்தது எல்லாமே சற்று வித்தியாசமான ஆட்டங்களாக இருந்தன - 264 ரன்கள், 160 ரன்கள், மற்றும் RCB-க்கு எதிரான குறைந்த ஸ்கோர் கொண்ட ஆட்டம் என பலவற்றை பார்த்தோம். அதனால் ஆடுகளம் எப்படி இருக்கிறது, அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்து விளையாடுவது முக்கியம் என்று நினைத்தேன். அப்போதுதான் பேட்டிங் செய்வது எளிதாகும். அதே சமயம், டாஸ் வெல்வது அல்லது தோற்பது என்பது முக்கியமல்ல, 40 ஓவர்களும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுவதே முக்கியம். உண்மையைச் சொன்னால், இந்த ஆடுகளத்தைக் கணிப்பது கடினம். முதலில் பந்துவீசினாலும் அல்லது பேட்டிங் செய்தாலும், ஆட்டத்தைத் தொடங்கும் போது சூழலை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப செயல்படுவது அவசியம்." என்று கூறினார்.

ஆடுகளம் மற்றும் அணித் தேர்வு பற்றிப் பேசிய கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல், "முதலில் பேட்டிங் செய்வதோ அல்லது பந்துவீசுவதோ நமது கைகளில் இல்லை. எனவே, ஒரு அணியாக முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது பந்துவீசினாலும் நாம் தயாராக இருக்க வேண்டும். முதல் பந்திலிருந்தே மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம். நான் டெல்லி ஆடுகளங்களில் விளையாடிய வரை, அங்கு அதிக சுழல் இருக்காது என்றே உணர்கிறேன், ஆனால் ஆடுகளம் சற்று மெதுவாக இருப்பதாலோ என்னவோ, பந்து பிட்ச் ஆன பிறகு மெதுவாக வருகிறது. அதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இந்த ஆடுகளங்களில் மெதுவான பவுன்சர்கள் மற்றும் ஸ்லோயர் பால்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற கூட்டணியைப் பயன்படுத்த நினைத்தேன்." என்றார்.

 ANIஇந்த முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்திடாத வருண் சக்கரவர்த்தி, அடுத்த 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றினார் (கோப்புப் படம்)

பிளேயிங் லெவனில் யார்?

டெல்லி கேபிட்டல்ஸ்

இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கருண் நாயர் மற்றும் நடராஜன் ஆகியோருக்குப் பதிலாக விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டனர்.

பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, நித்திஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், லுங்கு எங்கிடி, முகேஷ் குமார்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கருண் நாயர், குல்தீப் யாதவ், அபிஷேக் பொரெல், டி.நடராஜன், டேவிட் மில்லர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தப் போட்டிக்கான நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ராவ்மன் பவெல், மனிஷ் பாண்டே, அனுகூல் ராய், சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி,

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஃபின் ஆலன், ரமன்தீப் சிங், டிம் செய்ஃபர்ட், நவ்தீப் சைனி, தேஜஸ்வி தாஹியா.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ANI

source: bbc.com/tamil

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBC Tamil